#1. ஆதவன் எத்தனை ஆதவனடி!
1. புத்தியில்லாதவன்= புத்தியில் + ஆதவன்.
2. சக்தியில்லாதவன் = சக்தியில் + ஆதவன்.
3. பொறுப்பில்லாதவன் = பொறுப்பில் + ஆதவன்.
4. சகிப்பில்லாதவன் = சகிப்பில் + ஆதவன்.
5. அறிவில்லாதவன் = அறிவில் + ஆதவன்.
6. செறிவில்லாதவன் = செறிவில் + ஆதவன்.
7. நிறைவில்லாதவன் = நிறைவில் + ஆதவன்.
8. போக்கில்லாதவன் = போக்கில் + ஆதவன்.
9. தெளிவில்லாதவன் = தெளிவில் + ஆதவன்.
10. வலிவில்லாதவன் = வலிவில் + ஆதவன்.
11. குறைவில்லாதவன் = குறைவு + இல் + ஆதவன்.
12. அழிவில்லாதவன் = அழிவு + இல் + ஆதவன்.
த்வாதச ஆதித்யர்கள் என்பவர் இவர்கள் தானோ?
#2. இது எப்படி இருக்கும்?
1. முத்தின பீன்சும், மொண்ணைக் கத்தியும்!
(விபரீதக் கூட்டணி அமைத்தவர்கள் )
2. தொட்டாச் சிணிங்கியும், கொட்டாப் புளியும்.
(வியத்தகு மனிதர்கள் இவர்கள்)
3. இறால் மீனும் சுறாமீனும்
(வலையில் மாட்டும் மற்றும் மாட்டாத இருவர்)
4. எட்டாத கனியும், கிட்டாத ஏணியும்.
(தோல்வியில் மனம் துபள்பவர்)
5. ஊசிக்காதும், ஒட்டகமும்.
(கல்லில் நார் உரிக்க வல்லவர்)
6. வடவாக்னியும், கடல் நீரும்
(மனத்தை அடக்கிய மகான்)
7. வெத்து வேட்டுகளும், வாய்ச் சொல் வீரர்களும்
(உலகு எங்கும் நிறைந்துள்ள மனிதர்கள்)
8. சபலர்களும், சுலபர்களும்.
(பிழைக்கத் தெரிந்த மனிதர்கள்)
9. குள்ள நரியும், பன்னீர் திராட்சையும்
(பிறர் சாதனைகளைச் சோதனை செய்பவர்)
10. ஒழுகும் பேனாவும், அழுமுஞ்சியும்
(தானும் கெட்டு அடுத்தவனையும் கெடுப்பவர்)
11. குட்டிச் சாத்தானும், கெட்டிக்காரனும்
(பழுதையும் படம் எடுக்க வைக்க வல்லவர்கள்)
12. அரைவேக்காடும், அவசரக் குடுக்கைகளும்
(அவையில் எப்போதும் முந்துபவர்கள்)
#3. ஏணியும், தோணியும்.
ஏணி மற்றவர்களை மேலே ஏற்றி விடும்.
ஏணியால் மேலேறிச் செல்ல முடியாது!
தோணி மற்றவர்களைக் கரைசேர்க்கும்
தோணி மிதப்பதோ என்றும் நீரிலேயே!
நாம் சேர்க்கலாம் இவ்வரிசையில்
நம் ஆசிரியப் பெருமக்களையும் கூட!.
எண்ணும் எழுத்தும் கற்பித்தவர்
என்றும் இருப்பார் ஆசிரியராகவே!
அக்கறை கொண்ட மாணவனோ
அக்கரைச் சீமையில் பணிபுரிவான்.
என்றாவது ஒருநாள் அவரை நினைத்தால்
குன்றாத மதிப்பு வைத்துள்ளவன் ஆவான்.
#4. தொட்டாச்சிணுங்கியும் கொட்டாப்புளியும்.
நாம் காணும் மனிதர்கள் இருவகை.
ஆம், இரண்டும் என்றும் எதிர்மறை!
சுட்டு விரல் படும் முன்பே சுருண்டுவிடும்
தொட்டாச் சிணுங்கி அதில் ஒன்று, மற்றது
கொட்டியால் அடித்தாலும் பதறாமல்
கெட்டியாக இருக்கும் கொட்டாப் புளி.
தொட்டாச் சிணுங்கி சாதித்தது என்று
எட்டும் அறிவுக்கு ஏதும் புலப்படவில்லை.
கொட்டாப்புளி விடாக்கண்டன் போல்
கொடாக் கண்டனையும் சமாளிக்கும்!
#5. உண்மைப் பொருள்
“அவர் செத்துப் பிழைத்தார்” என்று பலமுறை
பலர் சொல்லக் கேட்டு இருக்கின்றேன் நான் !
அதன் உண்மைப் பொருள் விளங்கியது
அதனை எண்ணிப் பார்க்கும்போது இன்று!
நித்தம் நித்தம் சாகின்றார்கள் சிலர்
தத்தம் துயர் நிறைந்த வாழ்க்கையில்!
மொத்தமாக விடுதலை பெறுகின்றார்
தத்தம் உடலைத் துறந்தவுடனேயே .
வாழும் போது நன்கு ‘வாழாதவர்களாகவும்’
வாழ்க்கை முடிந்தபின் ‘வாழ்பவர்களாகவும்’
மாறுவது எப்படி என்று அறிந்தவர் கூறுவீர்!
மாறாத இந்தக் கேள்விக்கான விடையினை!