11. உரிமைக் குரல்
வீட்டுக்குள் ஊசியைத் தொலைத்துவிட்டு
வீதியில் தெருவிளக்கு ஒளியில் தேடினான்!
“அங்கே தொலைத்து விட்டு
இங்கே தேடுகின்றாயே!” என்றால்
“இங்கே தானே நல்ல வெளிச்சம்
இருக்கின்றது!” என்று சொன்னானாம்!
யாரிடமோ உதை வாங்கிக் கொண்டு வந்தவன்
பிள்ளையார் கோவில் ஆண்டியை அடித்தானாம்!
“ஏனடா இப்படிச் செய்கின்றாய்?” என்றால்
“என்னைத் திருப்பி அடிக்க மாட்டான் இவன்!
ஊருக்கு இளைத்தவன் இவன் தானே!”என்று
உரிமைக் குரல் கொடுத்தானாம்.
#12. “மாப்பிள்ளையோ மாப்பிள்ளை!”
மாப்பிள்ளை பார்த்துவிட்டு
வந்தவரிடம் கேட்டார் நண்பர்,
“மாப்பிள்ளை எப்படி என்று?”
“மாப்பிள்ளை சூப்பர் தான்!
அத்தனை லக்ஷணங்களும் உண்டு!
அந்த இரண்டைத் தவிர!” என்றாராம்.
“அந்த இரண்டு என்றால் என்ன?” என்று
அவரிடமே நீங்கள் கேட்கப் போனால்,
எதிர்பாராத பதில் இருக்கும் இதுவாக!
எதற்கும் சொல்லிவிடுகிறேன் முன்பாக!
“தனக்காகவும் தெரியாது அவருக்கு!
பிறர் சொன்னாலும் புரியாது போங்கள்!”
#13. நவாபும் அவன் ஜவாபும்!
உள்ளூர் பெருந்தனக்காரர்
பள்ளிக்கு அனுப்பினார் – தன்
எள்ளளவும் விருப்பம் இல்லாத
பிள்ளையைப் படிப்பதற்கு!
எல்லை இல்லாத அளவுக்குத்
தொல்லைகள் செய்பவன் அவன்;
சொல்லாமலேயே ஊரில் உள்ள
எல்லோரும் அறிந்த உண்மை இது!
பள்ளி ஆசிரியரிடம் சொன்னார்
உள்ளூர் பெருந்தனக்காரர் இதை!
“அளவில்லாமல் குறும்பு செய்தால்,
விளாசுங்கள் அடுத்த பையனை!
தொட்டு அடிக்க வேண்டாம் என்
பட்டு குமாரனை நீங்கள்!” என்று!
பொட்டில் அடிப்பது போன்று
போட்டு உடைப்பதும் உண்டு !
பெண்டாட்டியை கண்டிக்கத்
துப்பு இல்லாதவன், சென்று
கண்டிப்பதுண்டு, தன் தம்பி
பெண்டாட்டியை! வீர சிங்கம்!
தன் வீட்டில் உள்ள ஊழலைத்
துடைத்துத் தள்ள இயலாதவர்
அடுத்த வீட்டில் நுழைந்து
குட்டையைக் குழப்புவார்கள்!
“குல்லா போட்ட நவாபு!
செல்லாது உங்க ஜவாபு!”
என்று பாடவேண்டியது தான்
இன்னும் மிச்சம் ஆக உள்ளது!
#14. பூனையின் பூலோகம்!
பூனை கண்ணை மூடிக் கொண்டால்,
பூலோகம் இருண்டு போய் விடுமா?
தனக்கு விருப்பம் இல்லாத ஒன்றை,
தான் அறியாமல் இருப்பது போலக்
காட்டுவது தான் என்ன வேடிக்கை!
மாட்டுவது நிச்சயம் என்றபோதும்!
விந்தைகளில் எல்லாம் விந்தையானது,
சிந்திக்கத் தெரிந்த மனித மனம் தான்!
பாசாங்கு செய்து விளையாடுகின்ற
பச்சைக் குழந்தைகளைப் போலவே;
வாழ்நாள் முழுவதும் ஒருவரால்
வாழ்ந்துவிட முடியுமா என்ன?
#15. கர்மமே!
பிறப்பும் கர்மத்தால்;
இறப்பும் கர்மத்தால்;
இடையில் நடக்கும்
டிராமாவும் கர்மமே!