#26. ஒரு குறும்பு அகராதி:
‘அடி வருடி’ = “ஆமாம் சாமி” போடுபவன்.
‘பிடி பிடரி’ = தவறுகளை தைரியமாகச் சொல்பவன்.
தியாகி = தான் வீழ்ந்தாலும் பிறரை வாழ வைப்பவன்.
துரோகி = தான் வாழ பிறரை வீழ்த்துபவன்.
பின்குறிப்பு:
உலகெங்கிலும் அடிவருடிகளுக்கே
உற்சாக வரவேற்பு அளிக்கப்படும்
#27. எறும்பும், துரும்பும்.
எறும்பானாலும், இறைஅருள் தேடும்
சிறு எறும்பாக நான் ஆக வேண்டும்;
கரும்பானாலும், காமாக்ஷி கையில்
கரும்பு வில்லாக நான் ஆகவேண்டும்;
இரும்பானாலும், உலகுக்கு உதவும்
பொருளாக நான் ஆக வேண்டும்;
துரும்பானாலும் பானகத்திலுள்ள
துரும்பாக ஆகாது இருக்கவேண்டும்.
#28. ஆணும், பெண்ணும்.
“ஆணும், பெண்ணும் சரி சமமே!” என்று
ஆணித்தரமாகப் பேசுகின்றவர்களுக்கு!
உடல் ரீதியாக மட்டுமின்றி அவர்கள்
உள ரீதியாகவும் மாறுபடுகின்றனர்.
“ஒரு ஆணின் மனோபாவத்தைப் பெறும் பெண்
ஒரு பதிதை ஆகின்றாள்.”
“ஒரு பெண்ணின் மனோபாவத்தைப் பெறும் ஆண்
ஒரு மகான் ஆகின்றார்.”
“தேவையில்லாத பிரச்சனைகளை எழுப்புமோ
பாவையர், ஆடவர் பற்றிய இந்தக் கூற்று?”
தெள்ளத் தெளிவாக அனைவரும் தத்தம்
உள்ளக் கருத்துக்களைக் கூறிவிட்டதால்;
என்றோ, எங்கோ, நான் படித்த முதுமொழி.
இன்று, இங்கே, இப்போது வெளிவருகின்றது!
#29. ஆணும், பெண்ணும்.
“எதையும் ஒருமுறை” என்று
எண்ணித் துணிபவன் ஆண்.
“எப்போதும் ஒருவரே” என்று
எண்ணி மனம் பணிபவள் பெண்.
நான் சொல்லுவது எனக்கு
நன்கு தெரிந்தவர்களைப் பற்றி.
புதுமை பெண்களையும் அவர்களுக்குப்
புதுபலம் கொடுப்பவர்களையும் அல்ல!
#30. ஆக்கமும், ஊக்கமும்.
தானாய்ப் பழுத்த கனி
தேனாய்ச் சுவைக்கும்.
வெம்பிப் பழுத்ததோ
வேம்பாய்க் கசக்கும்.
தானாய் மலர்ந்த மலர்
தன் மணம் பரப்பும்.
பிரித்து விரித்த மலர்
சிறிதும் மணம் தராது.
இறக்கை முளைக்கும் முன்பே
பறக்க விரும்புமோ பறவை?
பறக்க முயன்றாலும் அதன்
சிறகுக்கு உண்டோ பலம் ?
இயற்கையின் நியதிகளை
ஏற்கின்றன உயிரினங்கள்.
முரட்டு மனிதன் மட்டுமே
குறுக்கு வழியில் முயல்வான்!
புகையில் வைத்துக் கனியின்
சுவையினைக் கெடுத்திடுவான்.
வலியப் பிரித்து மலர்களை
மெலிந்து வாடச் செய்வான்.
ஆக்கப் பொறுத்தவர் தாம்
ஆறவும் பொறுக்க வேண்டும்.
தேக்கு வலிமை பெறவேண்டித்
தவம் நின்று செய்கின்றதே!
ஆக்கத்துக்கு வேண்டியது
ஆர்வம் மட்டும் அல்லவே.
ஊக்கம் நிறைந்த நல்லதொரு
உழைப்பும் அவசியமன்றோ?