#41. “நாயேனைக் காத்தருளும்”
சிறு வயதில் சீரியஸ்நெஸ் இல்லாமல் பஜனையில்
குறும்புத்தனமாகக் கந்தன் பாடலைப் பாடுவோம்.
“நாயேனைக் காத்தருளும்” என்ற வரியின் போது
பக்கத்துவீட்டு அம்மாள் அழத் தொடங்குவார்.
எங்களுக்கு அது மிகவும் வேடிக்கையாக இருக்கும்!
ஒவ்வொரு முறையும் அந்தப் பாடலைத்
தவறாமல் பாடி அவரை அழவைப்போம்.
அவர் என் அழுதார் என்று அவர் வயதை
அடைந்த பிறகுதான் எனக்கே புரிகின்றது.
#42. அது மட்டும் முடியாது!
வானத்தை வில்லாக வளைக்கலாம்,
மணலை ஒரு கயிறாகத் திரிக்கலாம்,
நிலவைக்கூட எட்டிப் பிடித்துவிடலாம்,
விண்மீன்களால் மாலை கோர்க்கலாம்,
ஊசிக்காதில் ஒட்டகத்தை நுழைக்கலாம்,
நேசத்தை மனத்தில் புகுத்தி விட முடியாது!
#43. த்ரீ ரோசெஸ் மனிதர்கள்!
‘த்ரீ ரோசெஸ்’ டீ விளம்பரத்தில்
நிறம், மணம், குணம் என்னும்
மூன்றும் காணப்படுவது உண்டு!
மனிதர்களின் பெயர்களிலும் கூட
மணம், நிறம், குணம் உள்ளபடியோ
அல்லது விபரீதமாகவோ இருக்கும்!
அம்மாவாசையில் இருள் பெண்ணுக்கு
பூர்ணிமா என்ற ஒளிவீசும் ஒரு பெயரும்
அன்பு என்பதின் பொருள் தெரியாதவருக்கு
பிரேமா, ஸ்னேஹா என்ற பெயர்களும் உண்டு!
வெளிப்பக்கமே இப்படி இருந்தால்
மறைந்துள்ள பக்கம் எப்படியோ???
#44. இறை என்பது…
ஆணும் அல்ல!
பெண்ணும் அல்ல!
அலியும் அல்ல!
உருவம் அற்றது!
பெயர் இல்லாதது!
அது ஒரு ஒளிப் பிழம்பு!
நூறு கோடி சூரியர்களின்
ஒளியை வெல்ல வல்லது!
என்று படித்ததாக நினைவு!!!
#45. தோல் இருக்கப் பழம் விழுங்கி!
வேலைக்காரனை நியமிக்க வேண்டி,
வேலை ஒன்றைக் கொடுத்தார் அவர்.
“கூடையில் நூறு முறுக்குகள் உள்ளன.
நடையாகச் சென்று கொடுக்கவேண்டும்
அடுத்த ஊரில் இருக்கும் நண்பருக்கு!
அடையாளமாக ஒரு ரசீதும் வேண்டும்!”
இருவரை மட்டும் சோதித்தார் அவர்;
இருவரில் எவன் சிறந்தவன் என்று!
முதலாமவனுக்கு வழியில் நல்ல பசி!
முன்னெச்சரிக்கையாகத் தரவில்லை,
வழியில் உண்ண உணவு எதுவும்; வேறு
வழி தெரியாமல் உண்டு விட்டான் அவன்
கூடையிலிருந்து பத்து முறுக்குகளை.
கிடைத்தது ரசீது வெறும் தொண்ணூறுக்கு!
இரண்டாமவன் மிகவும் தந்திரசாலி.
இரண்டு பிரச்சனைகளையும் ஒருங்கே
சமாளித்தும் விட்டான், ரசீது சரியாக
சமர்ப்பித்து வேலையில் சேர்ந்தான்!
என்ன செய்தான் அவன்???
கணக்குக்கும் நூறு முறுக்கு வேண்டும்;
‘கணகண’க்கும் பசியும் தீர வேண்டும்!
ஒவ்வொரு முறுக்கிலிருந்தும் கவனமாக
ஒவ்வவொரு வரியை உடைத்து எடுத்தான்;
நூறு பெரிய முறுக்கு வரிகளை உண்டான்!
நூறு முறுக்குக்கு ரசீதும் கொண்டு தந்தான்!
தோலிருக்கப் பழம் விழுங்கி இவன் தானோ?
அன்றைய கதை இது தெரியும் !
இன்றைய கதை எது தெரியுமா?
A.T.M இல் நான்கு லக்ஷம் காணோம்!
பத்து நோட்டுக்கு ஒரு நோட்டு என்று,
பக்குவமாக உருவியுள்ளான் ஒருவன்!
‘பண்டில்’ கணக்கு சரியாக இருக்கும்!
கண்டு பிடிக்கவும் முடியாது, ஹையா !!!
moral of the story :-
வேலைக்காரன் அறிவாளியாக
இருக்க வேண்டியது அவசியம்.
வேலைக்காரன் தந்திரசாலியாக
இருக்கவேண்டியது அனாவசியம்!