#81. இவர்களை என்ன செய்யலாம்???
1. 120 decibel வால்யூமில் டெலி விஷனை அலறவைத்துவிட்டு
அதை விட சப்தமாக நடுவீட்டில் நின்று பேசுகிறவர்கள்…
2. விடியற் காலையிலேயே அடுத்த வீட்டுக்குச் சென்று
வம்பளப்பவர்கள்…
3. வரண்டாவில் நம் கதவருகில் நின்று நம் skype சேட்டை நாசம்
செய்பவர்கள்…
4. பூட்ஸ் காலில் மிதி வாங்கிய பிறகும் விடாமல் மாடிப் படியில்
காலரி சீட்டில் அமர்ந்து, வருகிறவர்கள் போகிறவர்களை வம்புக்கு இழுப்பவர்கள்….
5. பத்து மணி ஆன பிறகும் பரட்டைத் தலையோடும், விளங்காத
முகத்தோடும், நைட்டியில், நாணம் இல்லாமல்,
அடுத்த வீட்டு ஆண்களுக்கும் முன்பு வந்து நிற்பவர்கள்….
ஆறு மாதம் கதவைப் பூட்டிக்கொண்டு
கவலை இல்லாமல் பயணம் செய்வதற்கு
அனாவசியமாக நாங்கள் கொடுக்கும்
குடிக் கூலிகளா இவைகள்???
#82. தும்பிக்கையான்
தும்பிக்கை இல்லாத நீர்யானைகளைப்
பார்த்து விட்டு வெளியே போக நேர்ந்தால்,
தும்பிக்கையான் கோவில் அருகே நிறுத்தி
ஒரு நமஸ்காரம் செய்தபின் செல்லவும்!
பூதங்களிடம் இருந்து நம்மை
தெய்வம் தானே காக்கவேண்டும்!
#83. “இது போதுமா???”
ஐம்பது ரூபாயைக் கொடுத்துவிட்டு பாக்கி கேட்டால்
பாதியைத் திருப்பித் தருகின்றான் ஆட்டோ டிரைவர்!
போகும் போது நாற்பது ரூபாய்!!!
வரும் போது வெறும் இருபத்தி ஐந்தா???
“போதுமா பணம்?” என்று கேட்டால்
அதிகம் எடுத்துக் கொண்டு விட்டோமோ என்று
அவசரமாக இடத்தைக் காலி பண்ணுகிறான்.
இது எப்படி இருக்கு???
#84. இது எப்படி இருக்கு???
physiotherapy பெண் சொன்னாள்,
‘உங்கள் ஊரிலிருந்து
உங்களைப் போலவே ஒருவர்
காலவலி என்று வந்திருந்தார்!
ஆனால் அது நீங்கள் இல்லை”
“நான் தான் இரண்டு மாதங்களுக்கு
முன்பு கால் வலி என்று வந்தேன்”
நம்பவில்லை அந்தக் குட்டிப் பெண்.
கோணை வகிட்டை நேர் வகிடாக்கி
யோகா செய்து உடல் ட்ரிம் ஆனால்
ஆளே மாறிவிடுவோமோ???
ஒரு மச்சத்தை மட்டும் ஒட்டவைத்து
இரட்டை வேடங்களை வேறு படுத்தும்
திரைப்படங்கள் நினைவுக்கு வந்தன!
#85. இது எப்படி இருக்கு???
அவருக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!
அவர் அவள் அக்காள் கணவனின் ஒன்றுவிட்ட(?) மாமா.
அட்டைபோல ஒட்டிக் கொண்டு அவள் வீட்டுக்கு வந்தார்
அக்கா, அத்திம்பேருடன் நான்கு நாட்கள் தங்குவதற்கு!
விருந்தும், மருந்தும் மூன்று நாட்கள் என்பார்கள்.
இவரோடு மூன்று மணிநேரம் கூடத் தாக்குப் பிடிக்க முடியாது.
ஒரு சின்ன சாம்பிள் இதோ!
“ஏனம்மா நீ காத்தாலே எத்தனை மணிக்கு எழுந்திருப்பே?”
“ஆறு மணிக்கு மாமா !”
“நான் இருக்கற வரைக்கும் நாலு மணிக்கே எழுந்து
எனக்கு மட்டும் காபி போட்டுக் கொடுத்துடு சரியா?”
“சரி மாமா!”
“நல்ல ஸ்ட்ராங்காகவே போட்டுடு!’
“சரி மாமா”
“பாலும் நிறைய ஊத்திடு”
“சரி மாமா”
“சக்கரையும் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கட்டும்.”
“சரி மாமா”
“எனக்கு இந்த தம்ப்ளர், கப் இதெல்லாம் சரிப்படாது.
ஒரு லோட்டாவிலேயே நிறையக் கலந்துடு!”
“சரி மாமா”
லோட்டாக் காப்பியையும் சுவைத்துக் குடித்துவிட்டு
லூட்டிகள் என்ன என்ன செய்யப்போகின்றாரோ??
விருந்துக்கு வந்த இடத்திலேயே இத்தனை எதிர்பார்க்கும் ஒருவர்
தன் வீட்டில் என்ன என்ன செய்ய மாட்டார்???
பசங்கள் பயந்து ஓடுவதிலும்,
மருமகள்கள் வெட்டிக்கொண்டு போவதிலும்
என்ன அதிசயம்???