#86. இது எப்படி இருக்கு??
‘சிங்கக் க்ளப்’பில் இருந்த போது
ஒரு நண்பி சொல்வாள்,
“நான் டென்டல்;
அவர் மென்டல்!” என்று.
அவள் ஒரு பிசியான dentist!
அவள் கணவன் ஒரு psychiatrist!!
#87. இது எப்படி இருக்கு??
அன்னையையும், பெண்ணையும் பார்த்து,
“அக்கா, தங்கை போல் இருக்கிறீர்கள்!”
என்று சொல்லிப் பாருங்கள்!
உச்சி குளிர்ந்து முகம் தாமரை மலராகும்.
இது இரு வகைப் படும்…
1. அம்மா மிகவும் இளமையாகத் தோன்றும் போது!
2. பெண் பிஞ்சிலேயே பழுத்து கிழம் போலத் தோன்றும் போது!
#88. இது எப்படி இருக்கு??
நல்ல பெயர்ப் பொருத்தம் இருவருக்கும்!
அவன் பெயர் பழனி! அவள் வள்ளி!
காலனியைத் தூய்மைப் படுத்துபவர்.
வீட்டுக்கு வெளியில் இருப்பவை
அத்தனையும் அவர்கள் சொத்து.
கவலை இல்லாமல் கைவண்டியில்
தள்ளிச் சென்று காசாக்கிவிடுவர்.
இந்திர காந்தி ஹேர் ஸ்டைல் அம்மணிக்கு
நடுவில் வெள்ளி மயிரில் அகன்ற சாலை,
இருபுறமும் கருப்பு பார்டர் போல் முடி!
சரக் சரக் என்று நடப்பது பெரிய V.I.P போல!
ஐயா வெடி வைத்தால்,”புகைகிறது” ரகம்!
அவர்கள் ரகசியம் பேசிக் கொள்வது
எங்கள் காலனி முழுவதும் கேட்கும்!!
#89. கவிஞர்கள் பலவிதம்!
ஒவ்வொருவரும் ஒரு விதம் !
ஆசு கவி = எல்லோருமே அறிவோம்!
ஊசு கவி = ஊசிப் போன கவிதை.
ஏசு கவி = கவிதையிலேயே கலாய்ப்பவர்.
ஐசு கவி = பிழைக்கத் தெரிந்தவர்.
ஓசு கவி = ஓசியையே தன் கவிதை ஆக்குபவர்.
காசு கவி = திரைப் படத்தில் காசு பண்ணத் தெரிந்தவர்.
கீசு கவி = கவிதை சொல்கிறேன் என்று காதை ராவுபவர்.
கூசு கவி = கேட்டல் உடல் கூசும் கவிதை எழுதுபவர்.
கோசு கவி = கவிதையைக் கோசி ஆபரேஷன் செய்பவர்.
டீசு கவி = கவிதையிலேயே வம்புக்கு இழுப்பவர்.
தீசு கவி = கவிதையிலேயே அறம் பாடுபவர்.
தூசு கவி = எப்போதும், எங்கும், எதைப் பற்றியும், கவி பாட வல்லவர்.
தேசு கவி = புகழ் வந்த கவிஞர்.
நாசு கவி = பாடல்களை நாசம் செய்பவர்.
நீசு கவி = நீசமாக பாடுபவர்.
நைசு கவி = எப்படியும் பிழைத்துக் கொள்ளும் ரகம்.
நோசு கவி = அடுத்தவர் மூக்கை அறுப்பதில் ஆர்வமாக இருப்பவர்.
#90. கவிஞர்கள் பலவிதம்!
ஃ பீசு கவி = மொய் வைத்தால் தான் பேனாவையே திறப்பார்.
பூசு கவி = பூசி மொழுகுவதில் வல்லவர்.
பேசு கவி = இவர் பேசுவதே கவிதைகளில் தான்.
போசு கவி = கவிஞர் போல நன்கு போஸ் அடிக்கத் தெரிந்தவர்.
மாசு கவி = எப்போதும் பிறரின் குறைகளை ஹை லைட் செய்பவர்.
மூசு கவி = விமர்சனத்தைத் தாங்கமுடியாமல் முசு முசு என்று கண்ணீர் விட்டுக்
காணாமலும் போய்விடுவார்
மோசு கவி = கவிஞர் ஆனாலும் மிகவும் மோசமான மனிதர்.
யாசு கவி = எப்போதும் எப்படிப் பணம் பண்ணலாம் என்று சிந்தித்துக் கொண்டே
எழுதுபவர்.
யூசு கவி = உபயோகமான விஷயங்களையே எழுதுபவர்.
ராசு கவி = ராஜா என்ற பெயர் கொண்டவர்.
ரூசு கவி = எப்போதும் எல்லாவற்றுக்கும் நிரூபணம் கேட்பவர்.
ரேசு கவி = என்ன சொல்கிறார் என்று புரிவதற்குள் கவிதை முடிந்துவிடும்!
“ஆய் போயிந்தி ஆகி விடும்!”
ரைசு கவி = எப்போது உணவைப் பற்றியே எழுதுபவர்.
ரோசு கவி = காதல் தான் இவருடைய தீம் எப்போதுமே
ரௌசு கவி =. கவிதையிலேயே செய்பவர்.
லீசு கவி = பெரிய மனிதர்களுக்கு வாடகைக்கு கவிதை எழுதித் தருபவர்.
லாசு கவி = எழுத அமர்ந்தபின் எழுதமுடியாமல் அவதிப்படுபவர்.
லூசு கவி = என்ன எழுதினார் என்று யாருக்குமே தெரியாது (அவரையும் சேர்த்து)
லேசு கவி = எதையுமே லேசாக எடுத்துக் கொள்ளும் பக்குவம் அடைந்தவர்.
லௌசு கவி = காதலர்களைப் பற்றியே எழுதித் தன் தாபத்தை தீர்த்துக்
கொள்ளுபவர்
வீசு கவி = சொற்களையே கற்களாக வீசுபவர்.