#116. இது எப்படி இருக்கு?
அவனுக்குக் கோபம் கோபமாக வந்தது!
இப்படியா இரட்டைப் பிறவிகள் போல் இருக்கும்?
ஒரே உயரம்! ஒரே மாதிரிக் கொம்புகள்!!
ஒரே மாதிரி வால்கள்! ஒரே மாதிரி திமில்கள்!!
நண்பன் கேட்டான் அவனிடம் கனிவுடன்,
“எதைப் பற்றி அலுத்துக் கொள்ளுகிறாய் நீ?”
அவன் சுட்டிக் காட்டியது என்ன தெரியுமா?
ஒரு காராம்பசு, ஒரு வெள்ளைப் பசு!
#117. The Wonder Kid!
A for ஆய்!
B for பாய்!
C for காய்!
D for டாய்!
என்று பேசும் குழந்தையின் அம்மா சொன்னாள்,
“என்ன கேட்டாலும் சரியாகச் சொல்லுவான்!”
அவன் அப்பா கேள்விக் கணைகளைத் தொடுத்தார்.
“இது என்ன மாசம் கண்ணா?”
“மா!”
“பாத்தேளா மார்ச்ன்னு எத்தனை அழகா சொல்றான் கொழந்தை!”
“மாடு எப்படிக் கத்தும் கண்ணா?”
“மா!”
“பாத்தேளா மாடு மாதிரியே மான்னு சொல்றான்!”
இது யாரு கண்ணா?”
“மா!”
“பாத்தேளா அம்மான்னு சரியாச் சொல்றான்!”
அந்தக் குழந்தைக்குத் தெரிந்த ஒரே சொல் (எழுத்து?) மா!
அதற்குத் தகுந்தவாறு கேள்விகள் கேட்டு
அவனை ஒரு ஜீனியஸ் போல் project செய்வார்கள்!
#118. பெரிய விஞ்ஞானி அவர்.
வளர்ப்புப் பூனைகள் தொல்லை செய்தன!
வரும், போகும், அவற்றின் இஷ்டத்திற்கு!
திறக்கச் சொல்லிக் கதவைப் பிராண்டும்!
ஒரு வழியாக ஒரு நல்ல தீர்வு கண்டார்.
கதவில் இரண்டு ஓட்டைகள் போட்டார்!
தாய் பூனை அளவுக்கு ஒன்று பெரியது!
குட்டிப் பூனை அளவுக்கு ஒன்று சிறியது!
நண்பரிடம் சிரித்துக் கொண்டே விளக்கவும் அவர் கேட்டார்
“ஒரு ஓட்டையே போதுமே! தாய்க்குப் பின்னல் குட்டிகள் செல்லுமே!”
யானைக்கும் அடி சறுக்கும் அறிவீர் உலகீரே!
விஞ்ஞானிக்குக் காலை வாரும் புதிர்களும் உண்டு!!!
#119. Tail-less???
கண்ணுக்குத் தெரியாத வால் ஒன்று இருக்கும்
ஒண்ணுமில்லாமலா இப்படிச் சொல்கிறோம்???
வால் பையன்
ரெட்டை வாலு
சரியான வாலில்லாக் கொரங்கு
வால் ஒண்ணு தான் பாக்கி
ஒரு வாலை ஒட்ட வச்சுடலாமா?
வாலே ஒட்ட நறுக்கிடுவேன் ஜாக்கிரதை!
வாலாட்டற வேலையெல்லாம் நம்ம கையிலே வெச்சுக்காதே!
#120. இது எப்படி இருக்கு???
நண்பனின் மனைவி அலுத்துக் கொண்டாள்,
“என்னிடம் குழந்தைகள் ஒட்டுவதே இல்லை!”
சிறிது நேரம் பேசியவுடன் விளங்கின எனக்கு
அரிய பல உண்மைகள் அவளிடமிருந்து.
குழந்தையை எழுப்புபவர்…. டாடி!
குழந்தைக்குப் பல் தேய்த்து விடுபவர்….டாடி!
குழந்தையைக் குளிப்பாட்டுபவர்….டாடி!
குழந்தைக்கு உணவு ஊட்டுபவர்…. டாடி!
குழந்தைக்கு ஆடை அணிவிப்பவர் … டாடி!
குழந்தையைப் பள்ளிக்கூடம் அழைந்துச் செல்பவர்… டாடி!
குழந்தைக்குக் கதை சொல்லித் தூங்க வைப்பவர் …டாடி!
குழந்தை “pee” & “poop” போக வைப்பவர்… டாடி!
இப்படி எல்லா வேலைகளையும் டாடி செய்யும் போது
எப்படி, எதற்காக ஒட்டும் அந்தக் குழந்தை இவளிடம்???