Q126 TO Q130

#126. இன்னும் என்ன சுமக்க வேண்டும்?

கருவினை வயிற்றில் சுமப்பாள்.
திருவினை முகத்தில் சுமப்பாள்.

குழவியை இடுப்பில் சுமப்பாள்.
குடும்பத்தை நெஞ்சில் சுமப்பாள்

கடமையைக் கண்ணில் சுமப்பாள்.
கண்ணியத்தைப் பண்பில் சுமப்பாள்.

கவலையை கருத்தில் சுமப்பாள்
தலைவனைக் கற்பில் சுமப்பாள்.

இத்தனை சுமப்பது போதாது என்றால்
இன்னும் என்னென்ன சுமக்க வேண்டும்?


#127. சுண்டைக்காய் கால் பணம்;
சுமை கூலி முக்கால் பணம்.

(Penny wise and pound foolish).

‘பழம் மொழி’ என்று நினைத்தேன் நானும்!
பழமைக்குப் பழமையும், புதுமையும் இது!

வெறும் இருபது ரூபாய் படுத்தும் பாடு!!
வெறுப்பேற்றிவிடும் கேட்பவர் மனதிலும்.

தன் எடையையே தாங்க முடியாதவளை
தன் எடைக்கச் சமமான ஒரு பளுவைத்

தூக்கவைக்கும் அன்பான கணவர்களே!
துவண்டு கீழே விழுந்தால் என்ன ஆவாள்?

கால் முறிந்தால் காலத்துக்கும் அவதி
கட்டின கணவனையும் பாதிக்காதோ?

நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சுருண்டால்
கொஞ்சச் செலவா ஆகும் சிகிச்சைக்கு?

சிக்கனம் தேவை தான் வாழ்க்கையில்.
சிந்திக்க வேண்டும் சிறிதளவேனும்!

இடம், பொருள், ஏவல், காலம் என
இடர்ப்பாடுகள் உள்ளனவே ஏராளம்!


#128. ஊணும், உறக்கமும்.

ஊணும், உறக்கமும் தேவை
உயிர் வாழ்ந்திட உலகினில்!

எவ்வளவு தேவை என்பதும்
எவ்வளவு கிடைக்கும் என்பதும்

ஒன்றைச் சார்ந்துள்ளன – அந்த
ஒன்று தான் நமது யோகம்.

உணவு இருக்கும்… ஆனால்
உட்கார்ந்து உண்ண முடியாது.

ஒரு காரணம் நேரம் இன்மை!
மறு காரணம் உடல் நிலைமை!!

உறக்கம் வரும் பேரலை போல!
உறங்க முடியாது நிம்மதியாக!!

மணி ஒலி எழுப்பும் காலையில்!
மனிதர்கள் எழுப்புவர் மாலையில்;

என்றாவது ஒருநாள் அறியாமல்
கண்ணயர்ந்து விட்டோம் என்றால்!

உடல் நலம், மனநலம் மட்டுமன்றி
உண்மையில் அனைத்தும் யோகமே!


#129. இல்லாமல் முடியாது!

பொல்லாத நண்பர்கள் இல்லாமல்
கல்லூரியில் கலாட்டா செய்யவோ,

தோழிகள் துணையின்றி தலைவி
திரைப்படங்களில் நடனம் ஆடவோ,

குண்டர்படை துணையின்றித் தலைவன்
தொண்டர்களிடம் அரசியல் செய்யவோ,

அடியாட்கள் இன்றித் திரை வில்லன்
அடாவடிகள் அடுக்காகச் செய்யவோ,

பக்தர் கூட்டம் இன்றி சில மனிதர்கள்
முக்தி அளிக்கும் சந்நியாசிகள் ஆகவோ

முடியாது, முடியாது, முடியவே முடியாது!
ஒடித்து இவர்களை நாம் விலக்கிவிட்டால்

ஹீரோக்கள் ஜீரோக்கள் ஆகிவிடுவார்கள்.
ஹீரோயின்களும் கூட அங்ஙனமே!!!


#130. எழுத எதற்கு மதுவும், மாதுவும்???

ஓமர் காயம் முதல் லீ போ வரை
ஒரு போலவே விரும்புவார்கள்

ஒரு கையில் மதுக் கிண்ணமும்,
ஒரு தோளில் இளம் பெண்ணும்!

மது உள்ளே இறங்கிய பின்னர்
மாதுடன் கூடிக் கிறங்கிய பின்

ஊற்றெடுக்கும் அவர் கவிதைகள்
மற்றபடி உருவாகாது எதுவுமே!

பெண்கள் எப்படிப் புனைகிறார்கள்
மண்ணில் சிறந்த கவிதைகளை

மயங்கிக் கிறங்காமலும் மற்றும்
மயக்கும் மது அருந்தாமலும்???


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *