#136. காகமும், யானையும்.
காகம் கரைந்து உண்ணும் – இது
காகத்திடம் உள்ள ஒரே நற்பண்பு!
தன் இனம் வாழ எண்ணும் காகம்!
தன் இனம் இல்லாதவற்றைக் கொத்தும்.
குயிலாக இருந்தாலும் சரி – அன்றி அது
குன்றைப் போன்ற யானையானாலுமே!
ஆகாயத் தோட்டி எனப்படும் பறவை கூட
அடுத்த இனங்களை மட்டுமே தாக்கும்.
ஆனால் ஆறறிவு பெற்ற மனிதர்கள்???
#137. எறும்பும், யானையும்.
யானையின் சக்திக்கு முன்னால் நில்லாது
யானையின் நிறம் கொண்ட சிறு எறும்பு!
ஏமாந்த யானையின் காதில் நுழைந்தால்,
ஏற்படுத்தும் பெரிய துயர் கரிய யானைக்கு!
பெருமையை வியந்து எண்ணிக் கொண்டு
அறைகூவும் கரிய எறும்பினால் முடியுமா
பெரிய யானை செய்யும் செயல் ஒன்றேனும்?
பெரியவர் பெரியவரே! சிறியவர் சிறியவரே!!
உயர உயரப் பறந்தாலும், முயன்றாலும்,
ஊர்க்குருவி கருடனாக மாற முடியாது!
#138. கலை விழா
புத்தாண்டை நாம் வரவேற்காவிட்டால்
அது வராமல் இருந்துவிடும் கோபத்தால்.
எத்தனை இடர்கள் வருமோ தெரியாது;
எத்தனை துயர்கள் தருமோ தெரியாது;
ஆனாலும் கொண்டாடவேண்டும் அதை
ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன்!
மேடை அமைப்பார்கள் பெரிதாக!
ஜோடிப்பார்கள் திரைகளால் அதை.
இரவைப் பகல் ஆக்கும் விளக்குகள்;
இரவைப் பகல் ஆக்குவர் மக்களும்.
அந்த மேடையில் தான் நடக்கும்
அத்தனை நிகழ்சிகளும் அன்று!
பாடத் தெரிந்தவர்கள் பாடுவார்கள்.
ஆடத் தெரிந்தவர்கள் ஆடுவார்கள்.
சிறு குழந்தைகள் உலா வருவார்கள்
மாறு வேடங்கள் அணிந்துகொண்டு!
குட்டிக் குட்டி நாடகங்கள் உண்டு;
குட்டிக் குட்டிப் பாடல்களும் உண்டு.
எல்லாம் முடிந்ததும் உண்டு ஒன்று
நல்லோரை ஓடவைக்கும் ஒரு கூத்து!
குத்துப் பாடல் ஒன்றை அலறவிட்டு
மொத்தக் கூட்டமும் மேடை ஏறும்
எதுவுமே தெரியாதவர்கள் செய்வது
இது ஒன்று தானே இருக்க முடியும்!!!
அத்தனை நேரம் கண்டு ரசித்தவர்கள்
அத்தனை பேரும் நாலுகால் பாய்ச்சல்!
ஊராரின் உறக்கத்தையும் கெடுத்து
ஒருகை பார்ப்பார்கள் ஓசி மேடையை!!
தில்லானா தெரிந்தவர் அதை ஆடுவார்.
தில்லாலங்கடி தெரிந்தவர் அதை ஆடுவார்.
#139. இந்திய நண்டு!
ஒரு கண்காட்சியில் கண்டேன்,
ஒரு அறையில் நிறைய நண்டுகள்;
கண்ணாடிக் குடுவையில் இட்டு,
காற்றுப் புகாமல் மூடி இருந்தனர்.
ஒரே ஒரு குடுவை மட்டும் ஓர்
ஓரத்தில் மூடாமல் இருந்தது.
நண்டுகள் குடுவையில் ஏறின;
மீண்டும் உள்ளேயே விழுந்தன.
“திறந்த குடுவையிலிருப்பவை
புறத்தே தப்பிச் செல்லாவா?”
சிரித்தபடியே ஒருவர் என்னிடம்
கூறினார்,”அவை இந்திய நண்டுகள்!
ஒன்று மேலே ஏறினால் போதும்;
ஒற்றுமையாய் கீழே இழுக்கப்படும்!
நண்டு ஒன்றைத் தப்பிச் செல்ல அதன்
நண்பர்கள் விட்டு விடுவார்களா என்ன?”
இந்திய நண்டுகளில் எல்லாம்
முந்தி நிற்குது நம் தமிழ் நண்டு!
#140. பட்டங்கள் வேண்டாம்!
நல்ல விஷயங்களை நவில்வதற்கு
நான்கு, ஐந்து பட்டங்கள் வேண்டாம்!
நல்ல மனமும், பிறர் துன்பங்களை
நன்கு உணரும் இதயமும் போதும்!
கல்லில் கூடக் கொஞ்சம் ஈரம் உண்டு;
சொல்லில் அதைக் காணவில்லையே!
முள்ளில் கூட நாம் நார் உரிக்கலாம்!
உள்ளத்தில் அது முடியவில்லையே!
“நல்லவர்களுக்கு துன்பம் வரும்போது
நான் வருவேன்” என்றான் கண்ணன்.
சொன்ன சொல் தவறவில்லை அவன்.
சொன்னபடியே ஆவிர்பவிக்கின்றான்!
ஆவினம் மேய்ப்பவனாக வரவில்லை;
ஆவிர்பவித்து அவன் வருகின்றான்.
கொடுமைகளைச் சாடும் துணிவைக்
கொடுப்பவனே நமக்கு அவன் தானே!