#141. கிணற்றுத் தவளை.
“அவள் சரியான கிணற்றுத் தவளை!”
அவளுக்குக் கணவன் இட்ட பெயர்.
“என்ன தெரியும் அவளுக்கு? ஜடம்!”
இன்னும் என்னென்னவோ சொல்வார்
வம்பளக்க வருகின்ற நண்பர்களிடம்.
வம்பு வளரக் கேட்பானேன் அதன்பின்.
‘அமெரிக்க ரஷ்யா உறவு தெரியாது!
அமைதி இல்லாமல் தவிக்கும் பல
நாடுகளைப் பற்றி ஏதும் தெரியாது!!
வீடேகதி என்று கிடப்பாள் எப்போதும்!”
ஐயா அளக்கிறாரே என்று நீங்கள்
மெய்யாகவே மயங்கி விடாதீர்கள்!
ஐயாவுக்கு அமெரிக்கா பற்றித் தெரியும்
“பையன் என்ன படிகிறான்?” தெரியாது.
பெண் எதிர் வீட்டுப் பையனை பார்த்துக்
கண்ணால் சேதி சொல்வது தெரியாது.
ராக்கெட் போல எகிறும் விலைவாசியில்
பாக்கெட்மணிச் சம்பளம் எப்படிப் போதும்?
வயிறு வாடாமல் அனைவரின் தேவையை
வாயைத் திறக்காமல் பூர்த்தி செய்வது எப்படி?
“இதெல்லாம் நான் ஏன் சிந்திக்க வேண்டும்?
இதையெல்லாம் சிந்திக்க எனக்கு நேரம் எது?
அதற்குத் தான் ஒரு ஜடம் இருக்கிறதே!
அதன் பெயர் கூடக் கிணற்றுத் தவளை!!”
#142. நிஜமும் நிழலும்.
குழந்தையும் தெய்வமும்
கொண்டாடும் இடத்திலே!
குழந்தையின் முதல் தேவை
குடும்பத்தினரின் அரவணைப்பு.
எல்லோரும் கொஞ்ச வேண்டும்
எடுத்துத் தன்னை முத்தமிட்டு!
கண்களால் அவர் கண்களுக்குள்
கண் சிமிட்டாமல் உற்று நோக்கி
யார் வந்தாலும் ஸ்கேன் செய்யும்
யாரை நம்பலாம் என்பதைச் சரியாக!
உடனே அவரிடம் பாய்ந்து செல்லும்!
உடனே பின்வாங்கும் பிடிக்காவிட்டால்!!
Skype chat சௌகரியமானது நமக்கு!
போன் போலப் பேசலாம், பார்க்கலாம்!
ஸ்க்ரீன் 42″ என்றால், தெரிவார்கள்
உண்மையில் எதிரில் இருப்பதுபோல்.
எடுத்துக் கொள்ளச் சொல்லி அழும்
எடுத்துக் கைகளை முன்னாள் நீட்டி!
அவர்களும் கைகளை நீட்டினால் சற்று
அழுகை குறையும் ஆனாலும் ஐயம்…
“என்னை எடுத்துக் கொள்ளாதது ஏன்?
என்னை எடுத்துக் கொஞ்சாதது ஏன்?”
ஆறு மாதங்களில் ஆறிவு வளரவே
அறிந்து கொண்டது பேதங்களை நன்று!
இப்போதெல்லாம் அழுவது இல்லை.
இரண்டு கைகளால் தொடும் அவர்களை.
தட்டையான 2D என்றால் வெறும் நிழல்!
உருண்டையான 3D என்றால் நிஜம்!
#143. Larks and Owls
ஒவ்வொருவரின் உடலிலும் உண்டு
ஒரு விசேஷ biological clock என்பர்.
அந்த நேரப்படி உண்டு உறங்கினால்
எந்த வியாதியும் வராது உடலில்.
சொந்த வேலை காரணமாகவோ.
சொந்த சௌகரியத்துக்காகவோ
அதை நாம் ஒரு கை பார்த்தால்
அது பழுதாகிப் பிறகு பயன் தராது.
இங்கு குழந்தைகளின் நேரத்தையே
தங்கள் வசதிக்கு ஏற்ப மாற்றுகிறார்கள்.
விளைவு…..???
உணவு கிடைக்காது பசிக்கும் போது!
உறங்க முடியாது விரும்பும் போது!
எப்போது எவ்வளவு உண்ணும் ???
எப்போது எவ்வளவு உறங்கும்???
எவருமே அறியார்; குழந்தையும் கூட.
எங்குமே கண்டதில்லை நான் இதுபோல!
#144. ரோஸும், சேறும்!
நம் எண்ணங்கள் ஏற்படுத்தும் தாக்கங்களை.
நம் செயல்களும் ஏற்படுத்தும் தாக்கங்களை.
நல்ல தாக்கங்கள் ஏற்படும் நாம் செய்கின்ற
நல்ல செயல்களால் நல்ல எண்ணங்களால்
கூடை நிறைய ரோஜா மலர்களை எடுத்துக்
கூட்டத்தினருக்குக் கொடுக்கும் கரங்கள்
மலர்களின் மணம் பெறும்; வாசம் வீசும்.
மனம் மகிழும்; நற்செயல்கள் விளையும்.
கூடை நிறைய சேற்றை எடுத்துச் சென்று
கூட்டத்தின் மீது வாரி வீசினால் உடல்
நாறும் வாரி வீசிய சேற்றின் நாற்றத்தால்!
நாறும் மனமும் தீச் செயலின் தாக்கத்தால்.
ரோஸா? சேறா? எது வேண்டும் நமக்கு?
மணமா? நாற்றமா? எது வேண்டும் நமக்கு??
#145. தாயம் பன்னிரண்டு.
வெறும் ஒன்று இரண்டானது!
இரண்டு பின்னர் நான்கானது!!
நான்கு ஆறாகி, ஆறு எட்டாகி,
இன்று ஆனது பன்னிரண்டாக!
ஜனத்தொகை அல்ல இந்தத் தொகை.
ஜனங்கள் படிக்கும் blog தொகை இது.
நுழையார் கர்மமே என்று கருதுபவர்.
நுழைவர் கற்க விரும்புவர் விரும்பி.
பன்னிரண்டு பல்கிப் பெருகி இன்னும்
பன்மடங்காகிட அருளிட வேண்டும்
ஆனை முகனும், ஆறு முகனும்,
அன்னை கலைவாணி தேவியும்,
அஞ்சன வண்ணக் கண்ணனும்,
அஞ்சனா குமாரன் அனுமனும்!