Q151 to Q155

#151. “ஜெட் லேக் எப்போப் போகும்?”

நாடு நாங்கள் திரும்பும் முன்னரே,
வீடு நாங்கள் திரும்பும் முன்னரே,

விசிட் செய்யத் தயார் ஆகிவிட்டனர்
விருந்தாளிகள் இந்தியாவில் சிலர்!

ஆறு மாதங்கள் பூட்டிக் கிடந்த வீடு
தாறுமாறாக இருக்கும் அல்லவா?

தூசி தட்டி, சுத்தம் செய்து, வீட்டின்
மாசுக்களைச் சரிசெய்ய வேண்டாமா?

“அடுந்த நாளே வர வேண்டாம் நீங்கள்,
அடுத்த வாரம் வாருங்கள்!” என்றால்…

அதி மேதாவித்தனமான கேள்வி வரும்!
“அது சரி எப்போப் போகும் உன் ஜெட்லேக்?”

ஜெட்லாக் நாம் அழைத்து வரும் விருந்தாளியா?
ஜெட்லாக் ஒரு நாளும் இருக்கலாம் அல்லது

ஒரு வாரம் பத்து நாள் இருக்கலாம் அல்லவா?
சரியாகப் பன்னிரண்டு மணி நேரம் வேறுபாடு!

‘ஆடாமல் ஆடுகிறேன்’ என்று ‘பாடாமல் பாடி’
ஆடிச் சரியாக வேண்டும் இந்திய நேரத்துக்கு!

பகல் எல்லாம் தூக்கம் கண்களைச் சுழற்றும்;
இரவெல்லாம் பசி சிறு குடலைப் பிசையும்.

அடுக்களையில் சமைக்க எதுவும் இருக்காது!
அடுக்க வேண்டும் அத்தனையையும் வாங்கி!

வாழ்க்கையில் பாலக்காட்டையும் பழனியையும்
வழக்கமாகத் தாண்டியே இராதவர்களுக்கும்

எதையும் கேட்டுப் புரிந்து கொள்ளாதவர்களுக்கும்
இது புரியும் என்று எதிர்பார்ப்பது நம்முடைய தவறே!


#152. ஊசி போல உடம்பு!

அமெரிக்காவில் வின்டரில் குளிர் துளைக்கும்
ஊசி போல, உடலை எலும்பு வழியே ஊடுருவி!

பனிக்கட்டியின் உறைநிலை நிலவும் போது
குளிர்காற்றும் சேர்ந்து கொண்டால் பிறகு!!!

sweater + cap + glouse போட்டுக் கொண்டு
முழங்காலால் நான் Morse கோடு அடிக்கும்போது

ஊசிபோல ஒருவரைக் கண்டு வியந்து நின்றேன்.
வெறும் ஒரு டீ ஷர்ட் + ஜீன்ஸ் மட்டும் அணித்து

டக் டக் டக் என்று நடந்து செல்வதைக் கண்டு!
அந்தக் குளிரில் சிவாஜி போல அந்த நடையா?

அவரும் ஓருவேளை “cold blooded” ஆனவரா???


#153. டம்ளர் என்று ஏன் பெயர்???

அடி குறுகியும் மேல் விட்டம் விரிந்து
அமைந்தது அந்தத் தம்ப்ளர் எதற்காக?

எல்லோருக்குமே தெரியும் அது கையால்
எளிதாக ஐந்தை எடுத்துச் செல்வதற்காக.

ஆறு விரல்கள் இருந்தால் எளிதாக
ஆறு தம்ப்ளர்களையும் எடுக்கலாம்!

வசதிக்காக செய்வதே சில சமயம்
வம்பில் மாட்டிவிடும் நம்மை.

விழித்த முகம் சரியில்லை என்றால்
விபரீதங்கள் விளைந்து விடும்!

காலையில் பால் தம்ப்ளர் பணால்!
பாலாறு பெருகி ஓடியது தரையில்.

நடுப்பகலில் நீரோடை பெருகியது.
நனைந்தது ஒரு FRIED RICE PLATE

அதன் பிறகு ஜூஸ் கிளாஸ் டமால்!
அதன் பிறகு புரிந்தது பெயர்க்காரணம்!

TUMBLE ஆவதால் அது தம்ப்ளர்!!!


#154. ஃப்ரீ ப்ரேக் ஃபாஸ்ட்

நல்ல லாட்ஜுகளில் இது கிடைக்கும்.
நல்ல முறையில் அமைக்கிறார்கள்

அத்தனை வகைச் சிற்றுண்டிகளையுமே!
எத்தனை வேண்டுமானாலும் உண்ணலாம்!

கூட்டமாக இருக்கும் என்று நினைத்தால்
கூட்டம் ஒரேசமயத்தில் வருவதில்லை.

ஆறு முதல் ஒன்பது வரை என்றால்
ஆட்கள் ஒன்பதுக்குப் பிறகும் வருகை!

எதுவும் உண்ணாமல் திரும்ப நேர்ந்தது!
எல்லாம் அங்கு வைத்து இருந்த போதிலும்.

ஒன்பது மணிக்கு SECTION IN CHARGE
ஒரு போர்டை மாட்டிவிட்டுச் சென்று விட்டார்.

BREAKFAST BAR CLOSED என்று!
ஃ ப்ரீ உணவை உண்ணவும் லேட்டாக வருவதா???

பந்திக்கு முந்து படைக்குப் பிந்து போன்ற
பழமொழிகள் அந்த ஊரில் கிடையாதோ???


#155. கிளுகிளு! கிசுகிசு!

ரோடோரம் நின்று கொண்டும் சீறி வரும்
ஆட்டோக்களையும் தவிர்த்துக் கொண்டும்

சுவாரசியமாகப் படிப்பது சுவரொட்டிகள்!
சுவையான, திகிலான செய்தித் தலைப்புகள்!

ஒரு நாள் செய்தி படிக்காவிட்டாலும் சரிதான்
நூறு துண்டுகள் ஆகிவிடும் போலும் மண்டை!

தமிழ்ப் பத்திரிகையில் உள்ள திடீர் சுவாரசியம்???
தமிழ் பற்று இல்லாதவர்களிடம் காணும் அதிசயம் !!!

குட்டு வெளிப்பட்டது ஒரு நன்னாள் மாலை நேரம்.
எட்ட நின்று கம்ப்யூடர் திரையைக் கண்ட போது!

வம்பை வளர்த்து வெம்பிப் பழுக்க வைக்கும்
நம்ப முடியாத பலான அறிவுச் சுரங்கங்கள்!

குனித்து கொண்டு எப்போதும் எதையோ தேடும்
இனிக்(இளிக்)கும் அரைகுறை ஆடை அழகிகள்.

(அரை குறை ஆடை = 50% ஆடைகள். எனவே இவை
முக்கால் குறை ஆடைகள், 25% மட்டுமே இருப்பதால்!)

கிளுகிளுவும், கிசுகிசுவும், படாத பாடு படுத்தும்
கிழ, வயோதிக, வாலிப அன்பர்களை! உண்மை!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *