#16. குறிலும், நெடிலும்!
பாம்பு என்று எழுதச் சொன்னால்
பம்பு என்ற எழுதினான் ஒருவன்!
காரணம் கேட்ட போது சொன்னான்,
“கால் இல்லையே பாம்புக்கு! அதனால்
கால் கொடுக்கவில்லை நானும்” என்று!
குறிலை நெடிலாகவும், நெடிலைக்
குறிலாகவும் மாற்றிப் படியுங்கள்!
பொழுது போகாதவர்களுக்கும் கூட
பொழுது போதாமல் ஆகிவிடும்!
#17. “எல்லாம் நன்மைக்கே” !
வேட்டைக்குச் சென்ற ஓர் அரசகுமாரனுக்குக்
வெட்டுக் காயம் ஏற்பட்டுவிட்டது எப்படியோ!
எல்லாம் நன்மைக்கே என்று நம்பும் அமைச்சர்
“எல்லாம் நன்மைக்கே!” என்று அப்போதும் கூறினார்.
வெகுண்டு எழுந்த ராஜகுமாரன் அவரைக்
மிகுந்த காவலில் சிறைக்கு அனுப்பினான்.
மீண்டு வரும் வழியில் அவன் மாட்டிக்கொண்டான்
ஆண்களை நரபலி கொடுக்கும் ஒரு கும்பலிடம்.
அவனை இழுத்துச் சென்றவர்கள் கண்டது
அவனுக்கு ஏற்பட்டிருந்த வெட்டுக் காயத்தை.
குற்றம் குறை இல்லாத மனிதன் தேவை பலிக்கு.
இவன் நமக்குப் பயன் படமாட்டான்!” என்றபடி
அவனைத் தப்பிப் போக விட்டு விட்டனர்.
நாடு திரும்பியவன் மன்னிப்புக் கேட்டான்
வாடி சிறையில் இருந்த அன்பு அமைச்சரிடம்,
“என்னை மன்னியுங்கள் அமைச்சர் பிரானே!
உங்களைக் கைது செய்தேன் முட்டாள் நான்!”
“அதுவும் நன்மைக்கே” என்றார் அவர் மீண்டும்.
“இல்லாவிட்டால் அவர்கள் என்னை அந்த
பொல்லாத தேவதைக்கு பலி கொடுத்திருப்பார்களே!”
என்ன நம்பிக்கை! என்ன தீர்க்க தரிசனம்!
இவரல்லவோ நல்ல மதி மந்திரி!!!
#18. அண்ணனும் திண்ணையும்.
அண்ணன் பெயரில் தன் மகன்/ மகள்
மணப் பத்திரிகையை அச்சடிப்பவர்கள்
உள்ளனர் இன்றும் நம்மிடையே உலகத்தில்.
உள்ளத்தின் மரியாதையைக் காட்டும் வழி.
அண்ணனின் உரிமை திண்ணையின் மேலே.
அண்ணன் இருக்கும்போது அமர முடியாது
திண்ணை மேலே அவர் தம்பி ஒருநாளும்!
அண்ணன் எப்போது வெளியே போவன்?
திண்ணை எப்போது காலி ஆகும் என்று
காத்திருப்பனாம் அன்புத் தங்கத் தம்பி!
#19. முற்பகல் செய்யின்…
பெருந்தனக்காரர் அவர் முதாதையோர்!
பெருமை அதிகம் இருப்பது இயல்பே!
“மற்றவரோடு பழகுவது நம்முடைய
சுற்றத்தின் மதிப்பைக் குறைத்துவிடும்!”
எதற்கும் எப்போதும் போவதில்லை!
எதற்கும் அனுப்புவார் தம் கைத்தடியை!!
பணியாள் அதைக் கொண்டு செல்வான்.
பணியாள் அதைக் கொண்டு வருவான்.
பெரியவர் காலம் ஒருநாள் முடிந்தது
மரியாதை செலுத்த வந்தவர் எவர்???
அத்தனை வீட்டிலிருந்தும் வந்து சேர்ந்தன
எத்தனையோ விதமான கைத்தடிகள்!!!
#20. “போண்டா டீ”
போண்டா டீ” என்று வியாபாரம்!
ரயிலில் இருந்தவன் சிரித்தான்,
“பொண்டாட்டி?” என்று சொல்லியபடி.
“ஏய்! உனக்கு தமிழ் தெரியுமா?”
ஒருவன் அவனிடம் கேட்டான்.
அவ்வளவு தான் ஆவேசம் வந்தவன் போல
“ஹிந்தி தேரி மா! கன்னடா தேரி மா!
தெலுகு தேரி மா! இங்கிலீஷ் தேரி மா”
என்று சண்டை போடத் துவங்கினான்.
(தேரி மா = your mother in Hindi.)
அவன் அம்மாவைப் பழித்ததாக
அவன் எண்ணிவிட்டான்.
பெரியவர்கள் புகுந்து விளக்கி
சமாதானம் செய்யவேண்டி இருந்தது.