#51. உயர்திணையும், அஃறிணையும்.
குழந்தை வருது.
குழந்தை தருது.
அஃறிணையில் தெரிவது
அன்பின் மிகுதி.
ஆனால் …..
தாத்தா வருது.
பாட்டி தருது.
அஃறிணையில் தெரிவது
வெறுப்பின் மிகுதி!
#52. பூவும், தலையும்!
தலை இல்லத்தின் தலைவன்!
பூ பூச்சூடும் பூவை என்றால்,
கண்டிப்பும், கனிவும் நாணயத்தின்
இரு வேறு பக்கங்கள் ஆகும்.
கண்டிப்பு => தலை => தந்தை
கனிவு => பூ => தாய்.
#53. பாபமும், சாபமும்
தவறைச் சுட்டிக் காட்டினால்
தாறுமாறாகப் பேசுகிறார்கள்.
“கடவுள் நல்லறிவு தரட்டும்!” என்றால்
“சாபம் போடாதீர்கள்!” என்கின்றார்கள்.
பாபம் செய்பவருக்குச் சாபம் எதற்கு?
பாவமே தண்டனையைத் தந்துவிடுமே!
#54. என்ன தான் நடக்கிறது உலகத்தில்???
“இடது தோள் வலி தாங்கவில்லை!” என்று
நெருங்கிய நண்பியிடம் சொன்னால்,
“வலது தோள் வலி தாங்கவில்லையாம்!”
அவள் என்னிடம் சொல்கின்றாள்.
இன்னொருத்தி சொன்னாள் அப்போது,
“உங்களுக்காவது ஒவ்வொரு தோள் தான்!
இரண்டு தோளும் உறைந்து விட்டன எனக்கு!”
என்ன தான் நடக்கிறது உலகத்தில்???
யாருக்காவது புரிந்தால் சொல்லுங்கள்!!!
#55. வீடு விடுதி ஆனது!
சொந்த ஊரில் பேரனின் பூணூல் கல்யாணம் செய்யவேண்டுமாம்
சொந்த பந்தங்கள் அங்கே நிறையப்பேர் இருக்கிறார்களாம்.
பூனேயிலிருந்து பறந்து வந்தது குடும்பம்.
கன்வேயர் பெல்ட்டில் பையை எடுக்கும்போது
பையனுக்கு இடுப்பு ரிப்பேர் ஆகிவிட்டது.
“ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ!” என்று உயிர் எழுத்துக்களிலேயே
உயிர் போகும் வலியை வெளிப்படுத்திக் கொண்டு
ஒரு வழியாக அந்த கிராமத்துக்குச் சென்றார்கள்.
வணங்கா முடிகளை விழுந்து வணங்க வைப்பது
கணேசபெருமானுக்கு மிகவும் பிடித்து அல்லவா!
அரை இன்ச் மேடு (?) இடறி அங்கேயே ஒரு
சாஷ்டாங்க நமஸ்காரம், சகல தேவதைகளுக்கும்!
இரண்டும் இரண்டும் நாலு என்பது போல
வலி நான்கு மடங்காகிவிட்டது பாவம்.
அவன் தந்தை அழைக்கச் சென்ற இடத்தில்
விழுந்து விழுந்து கூப்பிட்டு உண்மையிலேயே
விழுந்து விட்டார் ஒரு அக்கிரஹார வீட்டில்.
விநாயகர் அருளால் முறிவு ஏதும் இல்லை!
அவரும் உயிர் எழுத்துக்களையே பேசிக் கொண்டு வரவும்
அந்த வீடு விடுதி ஆகிப் பின் பிரசவ விடுதி ஆனது!!!