Q6 to Q10

#6. சில எண்ணங்கள்…

எங்கிருந்தோ வந்து உதவுகின்றனர் பலர்.
எங்கோ மறைந்துவிடுகின்றனர் அதன்பின்!

வந்தது ஒரு மனிதனா அல்லது மனித உருவில்
வந்த தேவனா என எண்ணியதுண்டு பலமுறை!

நாம் செய்த நன்மை என்றும் வீணாகாது!
நமக்குச் செய்வர் நன்மை வேறு யாரேனும்!

ஒருவர் வளர்த்த பழ மரங்கள் வளர்ந்து
வேறு ஒருவருக்குப் பழம் தருவது போலே.

மண்வெட்டி போலச் செயல்படுவது நல்ல
பண்பாடு அல்ல என்றறிவோம் அனைவரும்.

ஒருவருக்கு நாம் செய்த உதவிக்குப் பலன்
வரும் அவரிடமிருந்தே என்பது உண்மை அல்ல.

எங்கோ, எப்போதோ, யாரிடமிருந்தோ
மங்காமல் வந்து சேரும் ஐயம் வேண்டாம்!

உதவி செய்தவன் அதை மறந்து விட வேண்டும்.
உதவி பெற்றவன் நினைவில் கொள்ளவேண்டும்.


#7. ஸ்வபாவத்தை மாற்ற முடியுமா?

நீருடன் அடித்துச் செல்லப்படும்
ஒரு தேளை எடுத்து காத்தேன்!

காக்கும் கரங்களைக் கொட்டி,
நோக்கம் இன்றியே ஓடியதால்;

மீண்டும் விழுந்தது அந்நீரிலேயே!
மாண்டே போய்விடும் அந்தத் தேள்!

மீண்டும் அதனைக் காப்பாற்றினால்
மீண்டும் என்னைக் கொட்டுகின்றதே!

தேள் என்று தெரிந்த பின்னரும்
தேடித் தேடி ஏன் உதவுகின்றேன்?

கொட்டுவது தேளின் ஸ்வபாவம்!
உதவுவது என்னுடைய ஸ்வபாவம்!

ஸ்வபாவத்தை மாற்ற முடியுமா?
ஸ்வபாவம் என்பதே நம் இயற்கை.

ஏணியாகவும், தோணியாகவும்
பணியாற்றுவது என் ஸ்வபாவம்!


#8. அதுவரை….?

கல்யாணம் செய்து கொள்ளும்
கனவு காணாத ஆண் யார்?

பெண் கிடைக்க வேண்டுமே!
பெண் சம்மதிக்க வேண்டுமே!

மண்ணாங்கட்டி போல உலவும்
ஆண்களை எவர் விரும்புவர்?

பல நூறு ஆண்டுகளாக
உலவும் ஓரு பழமொழி!

பைத்தியம் தெளிந்தால் திருமணம் நடக்கும்!.
திருமணம் நடந்தால் பைத்தியம் தெளியும்!

கோழியிலிருந்து முட்டை வந்ததா?
முட்டையிலிருந்து கோழி வந்ததா?

இது முடிவாகும் போது
அதுவும் முடிவாகும்.

அதுவரை….?


#9. கோபத் தீ!

காமமும், குரோதமும், நரகத்தின்
இரு வாயில்கள் தான் ஐயமில்லை!

பழுத்த வாணலி போலவே முகம்
சிவந்து உள்ளவர் எத்தனை பேர்?

பேசுவதற்கே அஞ்சி நாம் விலகும்
தோற்றம் கொண்டவர் எத்தனை பேர்?

மோட்டார் மூஞ்சி எல்லாம் தூசு!
புல்டோசர்/புல்டாக் மூஞ்சி முன்பு!

எத்தனை நன்மைகள் செய்தாலும்
அத்தனையும் வீணே கோபத்தால்!

எப்போதாவது கோபித்தால் மதிப்பு
தப்பாமல் கிடைக்கும் அதற்கு!

எப்போதும் கோபமே என்றால்
யாருமே சீந்தவும் மாட்டார்கள்!

உங்கள் முகமே உங்கள் பாஸ்போர்ட்.
உங்கள் முகத்தில் தேவை புன்னகை!


#10. செத்தும் கெடுத்த ஒருவன் கதை

“செத்தும் கொடுத்தான்!” வள்ளல் சீதக்காதி!
அத்தனை பேரும் அறிவார் இக்கதையை.

செத்தும் கெடுத்தவன் ஒருவன் கதையை
மெத்தப் படித்த குரு எங்களுக்குக் கூறினார்!

ஒரே ஒரு கிராமம், அதில் ஒரு ஜமீந்தார்!
ஒரு மாதிரிப் புரிந்திருக்கும் உங்களுக்கும்!

கேட்க ஆள் இல்லாததால், எல்லோருக்கும்
வேட்கைப் படித் தொல்லைகள் செய்தாராம்.

இறக்கும் தருவாயில் அனைவரையும் அழைத்துச்
சிறந்த மழை போலக் கண்ணீர் பொழிந்தாராம்.

“என் வாழ்நாட்களில் நான் செய்த பாவங்களுக்கு,
என்னை யாராலுமே மன்னிக்க முடியாது அறிவேன்!

நான் இறந்த பிறகு என் உடலுக்குச் செருப்புமாலை
ஒன்று அணிவித்துத் துடைப்பத்தால் அடியுங்கள்!”

“மாட்டோம்! மாட்டோம்!” என்று மறுத்தவர்களிடம்
மன்றாடினார்! தன் ஆத்ம சாந்தியை வேண்டினார்!

வேறு வழியில்லாமல் அவர்கள் ஒத்துக் கொண்டனர்.
மறு நாள் உடலுக்குச் செருப்பு மாலை அணிவித்தனர்.

துடைப்பத்தால் அடித்துக் கொண்டு செல்லும் போது….
அடுத்து வந்து நின்றன நிறைய போலீஸ் ஜீப்புகள்!

அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்!
அனைவருக்கும் தண்டனை கிடைக்கக் காரணம்…..???

இறக்கும் முன் போலீசுக்கு எழுதியிருந்தார் ஒரு கடிதம்!
“இறந்த என் உடலை அவமதிக்கப் போகின்றார்கள்” என!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *