#61. இது எப்படி இருக்கு?
நாயும், நரியும் போல
பாம்பும் கீரியும் போல
உறவாடும் இருவர்களில்
ஒருவர் கூறினார் மற்றவரிடம்.
“நாளை உன் பிறந்த நாள்.
நான் உன்னுடன் நாளை
சண்டை போட மாட்டேன்!”
“கல்லுக்குள் ஈரமா?
இரும்புக்குள் பாசமா?”
அதிசயித்தார் மற்றவர்
அடுத்த வாக்கியம்
காதில் விழும் வரை…
“நாளை மறுநாள் வரை
காத்திருக்க முடியாது.
நாளைய சண்டையை
இப்போதே போடுவோம்!”
#62. இது எப்படி இருக்கு?
அறுபது வயது நிரம்பியவர்களை
நாடு கடத்த வேண்டுமாம்!
அல்லது குறைந்த பட்சம் காலனியில்
இருந்து விரட்ட வேண்டுமாம்.
உற்சாகமாகத் திட்டம் தீட்டியது
மகளிர் அணி அன்று!
சொந்த வீட்டிலிருந்து இவர்கள்
எந்தக் காரணத்துக்காக
கிழக் கூட்டத்தை விரட்டமுடியும்???
பலன்…..
இன்று வெளியே வர முகம் இல்லாமல்
இல்லத்தில் முடங்கிக் கிடப்பது
“ஊர்ப் பிடாரியை விரட்ட முயன்று
தோற்ற ஒண்ட வந்த பிடாரிகள்!”
#63. இது எப்படி இருக்கு?
இயர் போனில் பாட்டு கேட்கும்
பால் வியாபாரி. காது கேட்காது!
நெடு நெடு உயரம்; பரபர ஓட்டம்;
எப்படி இவனிடம் எக்ஸ்ட்ரா பால்
கேட்டு வாங்க முடியும்???
ஒலிம்பிக் சாம்பியன் ஆக இருந்தால்
ஒரு வேளை துரத்திப் பிடித்து வாங்கலாம்!!
#64. இது எப்படி இருக்கு?
நல்ல நாளில் வேண்டுமாம் air டிக்கெட்.
நல்ல விலையில் வேண்டுமாம் டிக்கெட்.
மூன்று மாதம் முன்னால் கேட்டால்
ஒரு வேளை அது கிடைத்திருக்கும்!
ஒரு மாதம் முன்பு கேட்டால்
இரு மடங்கு சார்ஜ் ஆகாதோ???
#65. இது எப்படி இருக்கு?
ஈமூ கோழி வளர்ப்பதைப் பற்றி
பெரிய பெரிய சுவர் விளம்பரம்!
“ஈமூ கோழி வளர்ப்பதைப் பற்றிய
விளம்பரத்தைப் பார்த்து ஏமாறாதீர்கள்!”
என்று இன்னொரு விளம்பரம்
அதன் அருகிலேயே!