#76. மறைமுக அழைப்பு
“கெக்கே பிக்கே” என்ற பேசுவது போலத் தோன்றுவதில்
ஒளிந்து கொண்டு இருக்கும் ஒரு அழைப்பிதழ் இதோ.
லாஜிக் படித்தவர்கள் ஒப்புக் கொள்ளும் ஒரு வாதம்.
1. பேசாமல் உங்களையே கல்யாணம் பண்ணிக் கொண்டு இருக்கலாம்.
2. கல்யாணம் பண்ணிக் கொள்ளாமலேயே உறவு வைத்துக் கொள்ளலாம்.
3. மறைமுக அழைப்பு…”நான் ரெடி நீங்க ரெடியா???
#77. “இது என்ன பிரமாதம்?”
கட்டுக்காரன் கூலியைக் கேட்டு
விக்கித்து நின்றான் அவன்.
“இது என்ன பிரமாதம்?
நானே கட்டுவேன் என் வீட்டை!”
மளமள வென்று செங்கல்லை அடுக்கித்
தளதள வென்று பூசிக் கொண்டே போனான்.
ஐந்தடி உயரம் வீடு வளர்ந்தபின் ஒருநாள்
கண்டிபிடித்தான்,”கதவு வைக்க வில்லையே!”
அதுவரை உள்ளே தாண்டி குதித்தால்
தெரியவே இல்லை கதவு இல்லாதது!
ஒரு சுவற்றை இடித்து நிலவைப் பதித்தான்.
மீண்டும் மள மளவென வேலை நடந்தது.
கூரை உயரம் வந்ததும் தான் தெரிந்தது,
“அடடா ஜன்னல்கள் வைக்கவில்லையே!”
மீண்டும் சுவர்களைப் பெயர்த்து
மீண்டும் சுவர்களில் ஜன்னல்கள்.
இப்படி யாராவது செய்வார்களா என்று
தப்பான ஆராய்ச்சி செய்ய வேண்டாம்!
நிச்சயமாக செய்வார்கள் சிலரேனும்!
#78. “இது என்ன பிரமாதம்?”
வாட்டம் கொடுத்து டைல்ஸ் பதித்து இருந்ததால்
வாட்டர் stagnation வர வாய்ப்பு இருக்க வில்லை.
மழை நீர் ஜம்மென்று பாய்ந்து செல்லும் வெளியே.
வழி நெடுக பாத்திபோல மணல் திட்டும் ஒன்று இருந்தது.
மணல் திட்டை உயர்த்தினார்கள்; எதற்கோ தெரியாது!
வாசல் கேட் வழியாக நீர் வெளியே சென்று கொண்டிருந்தது.
வாசலில் ஒரு அணை கட்டினார்கள்; எதற்கோ தெரியாது.
இப்பொது மொத்தக் காலனியும் ஒரு giant frog pond !!!.
நீர் வெளியே செல்ல முடியாது; அணை தடுக்கும்.
நீரை டைல்ஸ் உறிஞ்சாது; உலரத் தான் வேண்டும்.
அதுவரை மொத்தக் காலனியும் ஒரு பெரிய
skating rink …skates அணியத் தேவை இல்லை.
இப்போது மீண்டும் குழி தோண்டுகிறார்கள்!
#79. தமிழ் வாழ்க! (தமில் வால்க?)
முன்பெல்லாம் வீடுகளில்
திண்ணை ஒன்று இருக்கும்.
வழிப் போக்கர்கள் தங்கவும்
சற்று ஓய்வெடுக்கவும் உதவும்.
ஒரு வீட்டுத் திண்ணையில்
ஒரு நாள் ஒருவன் இருந்தான்.
“எதற்கு இங்கே இருக்கிறாய்?” என
“மயைக்கு” என்று பதில் சொன்னான்.
“எங்கே போகிறாய்?” என்று கேட்கவும்,
“கியக்கே!” என்றான்.
“எதற்குப் போகிறாய்?” என்றதும்
“பியைக்க!” என்றான் அவன்.
“ஏன் இப்படிப் பேசுகிறாய்?” என்றதும்
“பயக்கம்” என்றானாம்.
#80. நன்மை
கவிதை எழுதுவதிலும் ஒரு நன்மை உண்டு.
திட்டும் போதும்கூட அது கவிதையாகவே வரும்.
இங்கு கேட்கும் சில வினோதமான ஒலிகளும் …
(அதற்கு என் மனத்தில் தோன்றும் எண்ணங்களும்…)
“க்வாக்! க்வாக்! க்வாக்!”
(ஏ வாத்து! வாயைச் சாத்து!!)
“க்ரோக்! க்ரோக்!”
(அடத் தவளே! குரல் சகிக்கலே!!)
“வீல்! வீல்!”
( இது வீல் இல்லே வாள்!
இந்தக் காது வழியாகப் போய்
அந்தக் காது வழியாக வரது!)
“டொம்! டொம்!”
(ஒண்ணு ball ஆவது உடையணும்!
அல்லது wall ஆவது உடையணும்!)
“கெக்கே பிக்கே”
(அட அச்சுப் பிச்சே!)