Q36 to Q40

#36. பேசும் கிளி!

பேசும் கிளி விலை வெறும் ஐநூறு ரூபாய்!

“பேசுமா இந்தக் கிளி?” என்று கேட்டால்,

பேசியது அது “அதில் என்ன சந்தேகம்?”

“நல்ல பேரம் தான் ஆனாலும் இன்னும்

சொல்லட்டும் ஒரு வார்த்தை மீண்டும்!”

“ஐநூறு ரூபாய் பெறுவாயா நீ சொல்லு?”

“அதிலென்ன சந்தேகம்!” என்றது கிளி.

உற்சாகமாக வாங்கி வந்தான் வீட்டுக்கு.

பிறகு தெரிந்தது அந்தக் கிளி பேசுவது

அந்த வார்த்தைகளை மட்டுமே என்று!

“உன்னை போய் விலைக்கு வாங்கினேனே

நான் ஒரு மாங்காய் மடையன் தானே?”

“அதில் என்ன சந்தேகம்?” என்று

ஒரே போடாய்ப் போட்டது கிளி.

இது எப்படி இருக்கு???


#37. பொம்மை

கோபுரத்தின் மேலுள்ள பொம்மை, தானே

கோபுரத்தைத் தாங்குவதாக எண்ணுவது ஏன்???

கோபுரத்தின் மேல் உள்ளவரை அதற்கு மதிப்பு.

கீழே விழுந்தால் மிதிபட்டுப் புழுதியாகிவிடும்!!!


#38. வருமுன் நம்மைக் காப்பவன்!

முள்ளினுள் ரோஜாவை வைத்தவன்,
கல்லினுள் ஈரத்தையும் வைத்தான்.

வருமானம் இல்லாத பெற்றோருக்குப்
பொறுப்புடன் பேணும் நல்ல மகன்கள்;

ஊதாரி மகனை பேணும் தந்தைக்கு
மாதாந்திர உயர்ந்த வருமானம்;

ஊனம் உற்றவனைப் பேணுவதற்கு,
நான்கு நல்ல அண்ணன் தம்பிகள்;

தொலைவில் மகன் இருப்பவருக்கு,
அளவிட முடியாத நல்ல நண்பர்கள்;

அன்னையற்ற குழந்தைக்கு அன்னை,
குழந்தை அற்ற அன்னைக்கு குழந்தை;

மனம் கனிந்து தருபவன் மாறாக் கருணை
குணம் உடைய இறைவன் அன்றோ!


#39. காதும், கண்ணும்

ஒரு army interview வில் கேட்டார்கள்,

“ஒரு காதை வெட்டினால் என்ன ஆகும்?”

“அந்தக் காது கேட்காது!”

“இரண்டு காதையும் வெட்டினால்?”

“கண் தெரியாது!”

“எப்படி? ஏன்?”

“தொப்பி கீழே இறங்கி கண்ணை மறைக்குமே!”

என்றான் அவன்.

இரண்டாவது ஆள் வந்தான்.

அவனும் இரண்டாவது கேள்விக்கு பதில்

“கண் தெரியாது” என்றான்.

அவன் தொப்பி அணிந்திருக்கவில்லை.

ஆனால் அவன் கண்ணாடி அணிந்திருந்தான்.

காதில்லாவிட்டால் கண்ணாடி நிற்காதே!


#40. எத்தனை வேற்றுமைகள்!

ஒரு information கேட்க வேண்டி
ஒரு neighbor வீட்டுக்கு வந்தார்.

கதவுக்குக் குறுக்கே கையை நன்கு
பதிய வைத்து பேசி அனுப்பினார்

கால் மணி நேரம், அவரிடம் இவர்.
கால் கடுக்க மனிதர் நின்றிருந்தார்.

“உள்ளே வரச் சொல்லி ஒரு சேரில்
உட்காரச் சொல்லி இருக்கலாமே!”

“வேறு வேலை இல்லையா எனக்கு!”
வேறு வேலை எனக்கும் இருந்தது.

நிற்க வைத்து பேசினாலும் அல்லது
நீட்டாக உட்கார வைத்து பேசினாலும்

அதே நேரம் தான் ஆகும் அல்லவா?
ஏதோ காரணம் சொல்ல வேண்டுமே!

பிறகு கண்டு கொண்டேன் இதுவும் நம்
பிறவியிலேயே வரும் ஒரு வேறுபாடு.

வீட்டுக்கு வந்த ஒருவர் பையனிடம்,
“அப்பா இருக்காரா கண்ணா?” என்றால்,

‘பேட்’டுடன் வெளியே சென்றுகொண்டே,
“அப்பா மாமா வீட்டுக்குப் போயிருக்கார்!”

உள்ளே இருந்து ஓடிவரும் அவன் தங்கை,
“உள்ளே வந்து உக்காருங்கோ மாமா!

அப்பா மாமா வீட்டுக்குப் போயிருக்கார்!
அப்பா இப்போ வந்துடுவார்!” என்று கூறி

சேரும் அமர்வதற்கு அளித்துவிட்டு
நீரும் குடிப்பதற்கு அவருக்கு அளிப்பாள்!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *